×

திருவெண்ணெய்நல்லூர் அருகே பங்குனி உத்திர திருவிழாவில் 9 எலுமிச்சை பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்: குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே பங்குனி உத்திர திருவிழாவில் குழந்தை இல்லாத தம்பதிகள், குழந்தை பாக்கியம் வேண்டி ஒன்பது எலுமிச்சை பழங்களை ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்திற்கு போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டைக் குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோயில் உள்ளது. கருவறையில் வேல் மட்டுமே உள்ள இந்த கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவின் இறுதி நாளன்று பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் உற்சவ காலங்களில் தினமும் வேலில் சொருகப்படும் 9 நாள் எலுமிச்சம் பழங்களை இடும்பன் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்டு எலுமிச்சம் பழத்தினை ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

இந்த எலுமிச்சை பழத்தினை சாப்பிடுவதால் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும், வயது முதிர்ந்தும் திருமணம் நடக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இதனால் இந்தத் திருவிழாவில் நடக்கும் ஏல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று வருகை தந்தனர். இடும்பன் பூஜைக்கு பிறகு கோயிலின் தலைமை பூசாரி ஆணி பதித்த காலணியில் நின்று ஏலத்தை தொடங்கினார்.

குழந்தை பாக்கியம் தரக்கூடிய முதல் உற்சவ எலுமிச்சை பழத்தினை ரூ.50 ஆயிரத்து 500க்கு குழந்தை பாக்கியம் வேண்டி தி. கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ் கனிமொழி தம்பதியினர் ஏலம் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து ஒன்பது நாள் முருகனின் வேலில் செருகப்பட்ட 9 எலுமிச்சம் பழங்களும் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்துக்கு 100 க்கு ஏலம் விடப்பட்டன. எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு ஈரத் துணியுடன் பூசாரி முன்பு பக்தியோடு மண்டியிட்டு பிரார்த்தனை செய்து கொண்டு புடவையின் முந்தானையில் எலுமிச்சை பழத்தினை பெற்றுக் கொண்டனர். இறுதியாக இடும்பனுக்கு படைக்கப்பட்ட கருவாட்டு குழம்பு கலந்த சாதம் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்த வினோத திருவிழாவில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவெண்ணெய்நல்லூர் அருகே பங்குனி உத்திர திருவிழாவில் 9 எலுமிச்சை பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்: குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Bunguni Uthra festival ,Thiruvennallur ,Thiruvenneynallur ,Otanandal ,Thiruvenneynallur, Viluppuram District ,
× RELATED தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது